Friday, August 6, 2010

கவிதையானதுதான் காதல்

நகம் கடித்துக் காத்திருக்கும்
தெரு முனையில்...
எதிர்வரும் பெண்களிடமெல்லாம்
உன் சாயல்.

பொழுதை இருட்ட வைத்து
கடைசியாய் நீ வருவாய்
புன்னகையுடனும்
எனக்கான ரகசிய முத்தங்களுடனும்.

காத்திருப்பின் வலியுடன்
சுகமானதுதான் காதல் எப்போதும்.


நான்காய் மடித்து
நீ தரும் கடிதங்களில்
பூசு மஞ்சள் படர்ந்த வாசனை.
ஒளித்த இடம் கேட்பேன்
பொய்க் கோபத்துடன் கைகள்
ஓங்குவாய்.

உன் கடிதத்தை
வாசிக்க வேண்டாம்
சுவாசிக்க வேண்டும்
என்பேன்.
செல்லமாய்க் குட்டுவாய்.

இனிமையானதுதான் காதல்
எப்போதும்.


வீட்டில் யாருக்கும் தெரியாமல்
நள்ளிரவில் கண்விழித்து
உனக்குக் கடிதம் எழுத
விருப்பம் என்றேன்.
தீர்ந்த மைப்புட்டியில்
இரண்டு மின்மினிகளை அடைத்து
மேசைவிளக்கெனப்
பரிசளிக்கிறாய்.

கவிதையானதுதான் காதல்
எப்போதும்.

முதல் முத்தம் புறங்கையில்.
இரண்டாவது
ஃபேர் அண்ட் லவ்லி மணக்கும்
கன்னத்தில்.
மங்கிய இரவில்,
பூங்காவில்
தற்செயலாய் நீ
முகம் நிமிர்ந்த கணத்தில்
மூன்றாவது.
முத்தத்தை விடவும் இனிமையானது
பின் நிகழும் மௌனம்.

அவஸ்தையானதுதான் காதல்
எப்போதும்.



மஞ்சள் தாவணி என்றால்
நாளைக்குக் கோயிலுக்கு வா.
நீலநிற சுடிதார் என்றால்
கடிதம் கொடுத்தனுப்பு.
இளம்பச்சை என்றால்
வீட்டில் யாருமில்லை.
தொலைபேசு.

சங்கேதங்களால் ஆனதுதான்
காதல் எப்போதும்.



அம்மாவிடம் கோயிலுக்கு.
அப்பாவிடம் கம்ப்யூட்டர் வகுப்பு.
அண்ணனிடம் தோழி வீட்டுக்கு.
அகாலத்தில் நாம் சந்திக்க
உன்னிடம் ஆயிரம் பொய்கள்.

உண்மை ஒருநாள்
எதிரியாய் வரும்வரை
எனக்கும் உண்டு சில உபாயங்கள்.

பொய்களால் ஆனதுதான் காதல்
எப்போதும்.


கண்காணிக்கப்படும� �
காதல்நாட்களில்
நள்ளிரவின் இருளுக்குள்
தொலைபேசியின்
இருமுனைகளிலும்
குரல் இல்லாது
வெகுநேரம்
மௌனமாய் அழுதிருக்கிறோம்
நினைவிருக்கிறதா?

சோகமானதுதான் காதல்
எப்போதும்.



முத்தம் கேட்டால்
காகிதத்தில் முத்தமிட்டுக்
கடிதம் தருவாய்.

சிறுதுயில் கொள்ள
உன்மடி கேட்டால்
நீண்ட கனவுகள் தருவாய்.

உடனிருக்கும் வாழ்க்கை
கேட்டால்
முழுவாழ்க்கைக்குமான
நினைவுகள் தருவாய்.

ஏமாற்றமானதுதான் காதல்
எப்போதும்.



No comments: