Monday, January 31, 2011

யுகபாரதி கவிதைகள்..


நாம் நின்று பேசிய
நுணா மரத்தை வெட்டி விட்டார்கள்..
நீ
விட்டுப்போன சுவடுகளில்
வெயில் படுமே என்றுதான்
வருத்தப்படும் அந்த மரமும்!

#################################


ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!

#################################


திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்
மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!
**
பழங்கஞ்சியும்
பயத்தந் துவையலும்
ஏர் உழும் மாமனுக்கு
எடுத்துப் போவாள்..
அவளுக்குப் பிடிக்குமென்று
ஈச்சம் பழங்களை
துண்டில் மூடித் தருவான்
அவன்..
வானம் பார்த்த பூமியில்
எப்போதும் பெய்தபடி
பிரிய மழை...

#################################


உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ
அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!


#################################


உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்

டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது


#########################


கவிதையில்
எல்லாம் சொல்லி
விட முடியாது
உன் அழகை!
எழுதும்போதே
கூடிக்கொண்டிருக்கும்
அழகு
உனக்கே உண்டானது!
**
சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
'ஜாக்கிரதை. இங்கே தேவ‌தைக‌ள் குறுக்கிடும்'
என குறியீடு வைக்க‌
திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!


###########################


இருபது கண் ராவணனுக்கு
இருந்தபோதும்
சீதையின்
இரண்டே கண்கள்
என்னபாடு படுத்தியது

எதற்கும் முக்கியமில்லை
எண்ணிக்கை
பதத்திற்கு
ஒரு சோறென்பது
பாமர சாதுர்யம்..
###############################

வருகை


உன்வீடு
பூட்டியிலிருந்தது
உண்மையெனில்
நான் வந்து சென்றதும்
பொய்யில்லை.
பூட்டியிருக்கும்
போது பார்த்து
ஏன் வந்தாய் என்பதோ
வரும்போது
பூட்டப்பட்டிருந்தது
ஏனென்றோ
எல்லாமாதிரியும்
கேள்விகளைக்
கேட்டுக்கொண்டு
குழம்பிப் போகையில்
நான்
வந்து போனதற்கான
சுவடை
தேடிக்கொண்டிருப்பாய்
தடிமனாய்
பூசப்பட்டிருக்கும்
உன்வீட்டு
சிமெண்ட தரையில்.


################################

புடவை


ரகத்திற்கொரு

புடவை வீதம்
கணக்கிட்டால் கூட
முப்பதுக்கும் மேலிருக்கும்
உன்னிடம்.

புடவையில்தான்
நீ அழகென
நூறு முறையாவது
உண்மை பேசியிருப்பேன்.

முழுதும் மூட
முடியாதென்பதே
புடவைகள்
மீதான குற்றச்சாட்டு!

எப்போதும் பேசப்படுவதோ
செய்தி வாசிப்போரின்
புடவைகள்

புடவைகளால்
நேர்ந்த
சிக்கல் எனக்கு
புடவையே
சிக்கலானது
திரௌபதிக்கு...
#######################

தனி...தனி...
எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை.

No comments: