Monday, August 16, 2010

காதலின் பின் கதவு - பழநிபாரதி

உனக்காக வைத்திருந்த
முத்தத்தில்
ஃப்ளோரைட் வாசம்!

உனக்காகப் பறித்த பூவில்
டீசல் தூசி!

உனக்காக வாங்கிய
வாழ்த்து அட்டையில்
மரத்தின் இரத்தம்!

எனது உலகத்திலிருந்து
ஏதுவுமில்லை உனக்கு!

காற்றை
அழுக்குபடுத்தாமல் ஓடும்
உனது குட்டிக் கார்!

வன்முறை அறியாத
இராணுவ வீரன்!

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்
சீனத் தங்கை!

விபத்துகளைச் சந்திக்காத
விமானம்
ரயில்!

மதங்களற்ற
உனது பொம்மைகளின்
உலகத்திலிருந்து
முடிந்தால் கொடு
எனக்கொரு சிரிப்பை!

################################


இசைத் தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்
முட்கள் நாம்!

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம் !

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உன் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின!

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருக்கிறாய்!

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வௌவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

யுகபாரதியின் திருமண அழைப்பிதழ்....


தேவதை தேவையில்லை

தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு!

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்!

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்.
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு

சமயத்தில் நிலவு என்பேன்!
சமையலில் உதவி செய்வேன்!
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்!

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு..

வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்!

வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்!

இளையபாரதி

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!

+-+-+-+-+-+-+-+-+-+-+-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
, ...


இளையபாரதி

சுகுமாரன்

ஸ்தனதாயினி


இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.


உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

Friday, August 6, 2010

அண்ணன் அறிவுமதி



வாழ்த்து அட்டை

முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

#####################

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

#####################

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.


-அண்ணன் அறிவுமதி